Wednesday, March 18, 2015

குடும்பத்தை ஒன்றிணைக்கும் சோமவாரம் 
சோமவாரம் என்பது திங்கட்கிழமையை குறிக்கும். அன்றைய தினம் சிவபெருமானுக்கு உகந்தநாள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். 

சந்திரன் கொடிய நோயால் துன்பப்பட்டான். நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். அவர் அருளால் நவக்கிரகங்களில் ஒருவன் ஆனான். அவன் பெயரால் சோமவாரம் (திங்கட்கிழமை) தோன்றியது. 

‘தன்பெயரால் தனது வாரத்தில் மக்கள் விரதம் இருக்க வேண்டும்’ என்று சந்திரன் சிவபெருமானை வேண்டிக்கொண்டான். அதனால் சோமவார விரதம் என பெயர் ஏற்பட்டது. 

இந்த சோமவார விரதத்தை திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் கடைப்பிடித்து, சாம்ப பரமேசுவர பூஜையை செய்தால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வெகுதூரத்தில் உள்ளவர்கள் தங்கள் இருப்பிடத்தை நாடி வந்து சேருவர். 

கணவன்– மனைவிக்கு இடையே பிரிவு இருக்காது. மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து சென்ற கணவன், ஓடோடி வந்து சேருவான். அந்த அளவுக்கு இந்த விரதம் மகத்துவம் வாய்ந்தது. திங்கட்கிழமை அன்று விரதத்தை மேற்கொண்டு சாம்ப பரமேஸ்வர பூஜை செய்தால் சகல செல்வங்களும் கிடைக்கும். 14 ஆண்டுகள் வரை இடையூறு இருக்காது. மாங்கல்ய தோஷம் ஏற்படாது. களத்திரதோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள் அவசியம் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். 

சோமவாரத்திற்கும் ஒரு கதை இருக்கிறது. அதை இப்போது பார்க்கலாம்.

ஒருகாலத்தில் ஆர்யா வர்த்தா நாட்டை சித்ரவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய ஒரே மகள் சீமந்தினி. மகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த மன்னன் சித்ரவர்மன், சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து தனது மகளுக்கு ஜாதகம் எழுதும்படி உத்தரவிட்டான்.

அந்த ஜோதிடர்களில் ஒருவர் ‘மன்னா! உன்மகள் அழகில் லட்சுமி, கலைகளில் கலைமகள், வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்குவாள். உலகமே போற்றி புகழும் படி கணவனுடன் பலகாலம் சேர்ந்து வாழ்வாள்’ என்றார்.

ஆனால் இன்னொரு ஜோதிடர் முகம் வாட்டமாக இருந்ததை கவனித்த மன்னன், அவருடைய கருத்தையும் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் மன்னரை அதிர்ச்சி அடைய செய்தது. ‘மன்னா! நான் சொல்வதற்காக வருத்தப்படக்கூடாது. உங்கள் மகள் திருமணம் ஆன சிலநாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழப்பாள். இது ஜாதக வாக்கு’ என்றார். 

இதைக்கேட்ட மன்னர் எல்லையில்லா வேதனை அடைந்தார். மகளை பார்க்கும் போதெல்லாம் அவரை துயரச்சுமை வாட்டியது. காலம் கடந்தது. மன்னரின் மகள் சீமந்தினி மணப்பருவம் அடைந்தாள். அவளது தோழிகள் அவளுடைய ஜாதகத்தில் வர       விருக்கும் ஆபத்தைக் கூறினார்கள். 

இளம்வயதில் கற்பனைச் சிறகுகளுடன் வானில் இறக்கைக்கட்டி பறந்த சீமந்தினிக்கு, கற்பனைக் கோட்டைகள் கலைந்தன. இருப்பினும் மன்னன் மகள் அல்லவா? மன தைரியத்தை விடவில்லை. மாமுனிவராகிய யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி, யானமைத்ரேயியை அடைந்து அவளை வணங்கி மனக்கவலையை தெரிவித்தாள். 

சிறந்த பதிவிரதையான மைத்ரேயி சீமந்தினியிடம், ‘அம்மா! கவலைப்படாதே! சோமவார விரதத்தை கடைப்பிடி. மலைபோல் துன்பம் வந்தாலும், பனிபோல விலகும்’ எனக்கூறி உபதேசம் செய்தாள். 

சீமந்தினியும் முறையாகச் சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். சீமந்தினிக்கு நளன் பேரனும், இந்திரசேனன் மகனுமான சந்திராங்கதனுடன் திருமணம் நடந்தது. தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். 

ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ஆனால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்தாள். அவள் விரதத்திற்கு பலன் விரைவிலேயே கிடைத்தது. 

திடீரென்று ஒருநாள் நீரில் மூழ்கிய அவளது கணவன் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை சில நாகர்கள் அழைத்துப்போனதாகவும், சிலநாட்கள் அவர்களிடம் இருப்பிடத்தில் தங்க வைத்து உபசரணை செய்து சீமாந்தினி செய்யும் சோமவார விரதம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு, மறுபடியும் தன்னை கொண்டு வந்து விட்டதாக கூறினான். பிரிந்தவர்கள் கூடினாலும் கேட்கவும் வேண்டுமோ! சீமந்தினி ஆனந்த கண்ணீர் வடித்து, கணவனோடு சந்தோஷமாக வாழ்ந்தாள். 

விரதம் இருப்பது எப்படி?

சோமவார விரதத்தை சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். ஆண், பெண்கள் இருவரும் கடைப்பிடிக்கலாம். 

இந்த பூஜைகளுக்கு, மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, உதிரிப்பூக்கள், வெற்றிலைப்பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கற்பூரம், வெல்லம், மாவிலை, வாழைப்பழம், அரிசி, தேங்காய், தயிர், தேன், தீப்பெட்டி, பூணூல், வஸ்தரம், அட்சதை (பச்சரிசியுடன் மஞ்சள்பொடி கலந்து) பஞ்சாமிர்தம், திராட்சை, கற்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின்பால் ஆகியவற்றை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

முதலில் ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். விடியற்காலையிலேயே விநாயகர் பூஜை செய்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். மஞ்சள்பிள்ளையார் பிடித்து வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டவேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக்கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனகுங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். பின்னர் பூஜையை தொடங்க வேண்டும். 

சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். தொடர்ந்து சிவநாமங்களை சொல்ல வேண்டும். பின்னர் தீபாராதனை கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். 

பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம்  செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை  ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்.

ஈசனிடம் சரணடைந்த சந்திரன்

தட்சனின் இருபத்தி ஏழு பெண்களையும் சந்திரன் திருமணம் செய்து கொண்டான். திருமணத்தின் போது அனைத்து பெண்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும் என்று தட்சன் சந்திரனிடம் உறுதி வாங்கினான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அதிகமான அன்பு காட்டினான். அதைக்கண்ட மற்ற பெண்கள் தட்சனிடம் சென்று முறையிட்டனர். இதனால் கோபம் கொண்ட தட்சன், சந்திரனை ‘தேய்ந்து போவாய்’ என்று சாபம் கொடுத்தான். 

தேய்ந்து கொண்டு வந்த சந்திரன் கடைசியில் சிவபெருமானிடம் தஞ்சமடைந்தான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்த சிவபெருமான், சந்திரனை தலையில் எடுத்து வைத்து கொண்டார். அதனால் சாபம் பாதியாக குறைந்தது. அதாவது பாதி நாட்கள் வளர்வதும், பாதி நாட்கள் தேய்வதுமாக மாறினான் சந்திரன். இப்படி தான் வளர்பிறை, தேய்பிறை உருவானது. 

இவ்வாறு சந்திரனை சிவபெருமான் திருமுடியில் அமர்த்தியது சோமவாரத்தில் தான். 14 ஆண்டுகள் சோமவாரம் பூஜை செய்யும் கணவன்– மனைவிக்கு, முக்தி பேற்றினை கொடுக்க வேண்டும் என்று ஈசனிடம் வேண்டினான் சந்திரன். அவனது விருப்பத்தை சிவபெருமான் நிறைவேற்றினார்.

***

சந்திரதோஷம்  போக்கும்  புஷ்பகரணி

தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகில் திங்களூர் எனும் பாடல் பெற்ற தலம் உள்ளது.இதுசந்திரன் கோவில். இங்கு பெரியநாயகி சமேத கைலாசநாதர் உள்ளார்.பவுர்ணமி, அமாவாசை வரும் திங்கட்கிழமை அன்றுஅவரை வணங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்கள் திங்கட்கிழமைகளில் வந்தால் அன்று வழிபாடு செய்வது மிகவும் நல்லது. கடக ராசிக்க£ரர்கள் கட்டாயம் வணங்கவேண்டும். சந்திர தலத்தில் புஷ்பகரணி தீர்த்தமுள்ளது.குஷ்டம், சித்தப்பிரமையால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து நீராடி சந்திரனை வணங்கினால் அவை நீங்கப்பெறும். இங்கு தினந்தோறும் காலை 7மணி முதல்1மணி வரையும், மாலை 4 மணி முதல் 9 மணிவரையும் பூஜைகள் நடைபெறும். 

கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் நுழைவுவாயிலில் திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் உள்ளது. இங்கு தண்ணீர் பருகிச் சென்றால் உத்தமம். தஞ்சையில் இருந்து திருவையாறு–கும்பகோணம் சாலையில் திருவையாறில் இருந்து 4கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. வெண்ணிற மலர் அர்ச்சனை, வெண்ணிற ஆடை, முத்து மாலை அணிந்து வழிபடுதல், பவுர்ணமி விரதம் இருத்தல், வெண்ணிற வஸ்திர தானம் செய்தல், அரிசி தானம் கொடுத்தல் இவற்றால் சந்திர கிரக தோஷம் நிவர்த்தி ஆகும்.

***

கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது 

சாகாவரம் தரக்கூடிய அமிர்தத்தை பெறவேண்டி திருப்பாற்             கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதில் இருந்து அமிர்தம் வந்தது. மகாவிஷ்ணு மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை மயக்கி அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் வழங்கினார். ஆனால் ராகு தேவரைப்போல் உருவம் தரித்தான். சூரிய, சந்திரர்கள் இதை மோகினிக்கு உணர்த்தினர். உடனே அவர் அந்த அரக்கனின் தலையை கொய்து விட்டார். ஆனால் அதற்குள் அமிர்தம் கழுத்துவரை சென்றுவிட்டது. இதனால் அவன் சாகவில்லை. தலை ராகு என்றும், உடல் கேது எனவும் அழைக்கப்பட்டனர். இதற்கு பழி வாங்குவதற்காக தான் ராகுவும், கேதுவும் அவ்வப்போது சூரியனையும் சந்திரனையும் மறைக்கின்றனர். 

சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர் கோட்டில் வரும் போது நடுவில் சந்திரனோ, பூமியோ வரும்போது சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. கிரகணகாலத்தில் சாப்பிடக்கூடாது. கிரகணம் விட்டபின் சந்திரனையோ, சூரியனையோ பார்த்தபின் தான் உணவு உட்கொள்ள வேண்டும். கிரகணத்தின் போது சூரியனையோ, சந்திரனையோ கர்ப்பமான  பெண்கள் பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்த்தால் பிறக்க போகும் குழந்தைகள் உடல் ஊனமுள்ளவர்களாக பிறக்கக்கூடும்.

No comments:

Post a Comment