Tuesday, January 13, 2015

திருமணமாம்! திருமணமாம்!





மனிதர்களுக்குள் உறவுப்பிணைப்பை ஏற்படுத்தும் புனிதமான பந்தம் திருமணம். முன்வினைப்பயன், தோஷங்களால் திருமணத்தடை ஏற்பட்டோருக்கு, தடைகளை நீக்கி நல்ல வாழ்க்கைத் துணையை தந்தருளும் உத்வாகநாதர், தஞ்சாவூர் மாவட்டம் திருமணஞ்சேரியில் அருளுகிறார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த குடும்பத்தினரும் இங்கு வந்து வழிபடலாம்.

தல வரலாறு: பரத்வாஜ மகரிஷி குழந்தை பாக்கியத்திற்காக, சிவனை வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாக குண்டத்தில், பார்வதி தேவி குழந்தையாக தோன்றினாள். அவளைத் தன் மகளாக ஏற்ற பரத்வாஜர், அவளை மணந்து கொள்ளும்படி சிவனை வேண்டினார். சிவனும் இங்கு வந்து அம்பிகையை மணந்து கொண்டார். 

சுவாமிக்கு உத்வாகநாதர் என்ற கல்யாண சுந்தரர் என்றும், அம்பாளுக்கு கோகிலாம்பாள் என்றும், தலத்திற்கு திருமணஞ்சேரி என்றும் பெயர் ஏற்பட்டது. "உத்வாகம்' என்றால் திருமணம். 

சுயம்வர தலம்: திருமண தோஷம் உள்ளவர்கள் கல்யாண சுந்தரருக்கும், கோகிலாம்பாளுக்கும் இரண்டு மாலைகளை அணிவிக்கின்றனர். அதில் ஒன்றை பிரசாதமாகப் பெற்று, வீட்டில் வைத்து பூஜிக்கிறார்கள். 

திருமணமானதும் அந்த மாலையுடன், மேலும் இரண்டு மாலையை கல்யாண சுந்தரருக்கு அணிவித்து நன்றி செலுத்துகின்றனர். திருமண வயதிலுள்ள ஆண்களும், பெண்களும் தங்களுக்கு வரன் வேண்டி இங்கு வந்து, கோயிலிலேயே சம்பந்தம் பேசி, 
திருமணம் நிச்சயம் செய்து கொள்கின்றனர். இவ்வகையில் இது ஒரு சுயம்வர தலமாகவும் திகழ்கிறது.

கோகிலாம்பாள்: அன்னை கோகிலாம்பாள் வலக்காலை மடித்து, இடது கையை தரையில் ஊன்றி, மணமேடையில் மணமகள் அமரும் பாவனையில் அமர்ந்திருக்கிறாள். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் ருது பிரச்னைகள் நீங்கவும், சுமங்கலிகளாக இருக்கவும் 
இவளை வழிபடுகிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு சுயம்வரபார்வதி யாகம் நடத்துகின்றனர். பிரிந்த தம்பதிகளும், குடும்பத்தினரும் ஒற்றுமையுடன் திகழ இவளை வேண்டி வரலாம்.

"கோகிலம்' என்றால் குயில். குயில் போன்ற ஓசையுடையவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். பாடகர்கள், சங்கீதம் பயில்பவர்கள், மேடைப்பேச்சாளர்கள் குரல் வளம் சிறப்பாக இருக்க இவளுக்கு அபிஷேகம் செய்வித்து வழிபடுகிறார்கள். 

ராகு பரிகார தலம்: சிவன் சந்நிதி கோஷ்டத்தில் (கருவறை சுற்றுச்சுவர்) ராகு இருக்கிறார். அவர், தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு இங்கு சிவனை வணங்கி விமோசனம் பெற்றார். மனித உடலுடன், தலையில் நாக கிரீடம் அணிந்து காட்சி தரும் இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அமாவாசையன்று பால்பாயசம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். மேலும், யோக தெட்சிணாமூர்த்தியும், கங்காவிசர்ஜனரும் கோஷ்டத்தில் உள்ளனர்.

வெண்ணிற ஆடை: இந்தக் கோயிலில் சூரியன், மும்மூர்த்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள், பச்சையப்பர், முருகன், பைரவர், சனீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு வெண்ணிற ஆடை அணிவிக்கும் வழக்கம் இருக்கிறது.
கல்வி பூஜை: கல்வி, ஜோதிடம் ஆகிய துறைகளில் சிறப்பிடம் பெறுவதற்கு புதன் கிரகத்தின் பார்வை வேண்டும். புதன் கிழமைகளில் இங்குள்ள பச்சையப்பநாதர், பச்சையப்ப நாயகிக்கு பச்சைப்பயறு படைத்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். 


இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 27 கி.மீ.


திறக்கும் நேரம்: காலை 7 - மதியம் 1.30, மாலை 3.30 - இரவு 8.30.
போன்: 04364 235 002.

No comments:

Post a Comment