Tuesday, January 13, 2015

நீங்களும் குபேரன் ஆகலாம்




செல்வச் சீமான்களை "குபேரன்' என்பார்கள். அவன் வெங்கடாஜலபதிக்கே கடன் கொடுத்த பெருமை உடையவன். அந்த குபேரனுக்கு இவ்வளவு வசதியைக் கொடுத்தது யார் தெரியுமா! சிவபெருமான் தான்! அந்தச் சிவன் "குபேரபுரீஸ்வரர்' என்ற பெயரில் தஞ்சாவூரில் வீற்றிருக்கிறார். செல்வத்திருநாளான தீபாவளியை ஒட்டி, இவரைத் தரிசித்து குபேரனாகும் பாக்கியம் பெறுங்கள்.
குபேரன் வரலாறு : பிரம்மாவின் மனதில் இருந்து புலஸ்தியர் என்ற மகன் தோன்றினார். இவருக்கு விச்வரஸ் என்ற மகன் பிறந்தார். சுமாலி என்ற அரக்கனின் மகள் கேகஸியை, விச்வரஸ் திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயின் குணநலத்துடன் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களே ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர். இதன் பின் விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர். இக்குடும்பத்தில் பிறந்த ஆண்மக்களில் ராவணனும், குபேரனும் சிவ பக்தர்கள். கும்பகர்ணன் தன் கொள்ளுத்தாத்தா பிரம்மாவின் பக்தன். விபீஷணன் பெருமாள் பக்தன். சூர்ப்பனகைக்கோ பக்தியும் கிடையாது, பெண்ணுக்குரிய நாணமும் இல்லாமல், ஆணழகர்களையும் தேடித் திரிந்தாள். ராவணன் சிவபக்தனாயினும் பெண் பித்தன். கும்பகர்ணன் சாப்பாட்டு ராமன். விபீஷணனும், குபேரனும் தப்பிப் பிறந்தவர்கள். அசுரகுணங்கள் எதுவும் இவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. ராவணன், சிவபெருமானிடம் மனிதரைத் தவிர பிறரால் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றவன். குபேரன் தன் சிவபக்தியால் வடதிசைக்கு அதிபதி ஆனவன். மேலும் சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு, அவரவர் விதிப்பயனுக்கேற்ப செல்வத்தைக் கொடுத்து வர கட்டளையிட்டார். இந்நிலையில், திருமாலின் மனைவியான மகாலட்சுமி, எட்டுவிதமான சக்திகளைப் பெற்றாள். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்று அஷ்டலட்சுமி என்று பெயர் பெற்றாள். இவளது சக்திகள் அனைத்தையும் சங்கநிதி, பதுமநிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். அவர்களை தன் கணக்கு பிள்ளைகளாக நியமித்துக் கொண்டார் குபேரன். குபேரன் அரசாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டணத்தை தேவசிற்பியான விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். 

இங்கு ஒரு அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இருந்த அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட பட்டு மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தினான் குபேரன். கிரீடம், தங்க ஆபரணம் அணிந்து,முத்துக்குடையின் கீழ் அமர்ந்த இவன், கையால் அபயமுத்திரை காட்டுவான். அதாவது, பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவன், முற்பிறவியல் பாவம் ஏதும் செய்யாமல் இருந்தால் அவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்குவது இவனது பணி. இவனது வலதுபுறத்தில் சங்கநிதியும், இடதுபுறம் பத்மநிதியும் இருப்பார்கள். சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பான். இவன் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவன். இவனது கையில் வர முத்திரை இருக்கும், பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள்.

தல வரலாறு: குபேரன் தஞ்சாவூருக்கு பயணமாகி சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) கட்டப்படுவதற்கு முன்னதாக, ஊர் எல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் "தஞ்சபுரீஸ்வரர்' எனப்பட்டார். இந்தப் பெயரால் தான், இந்த ஊருக்கே "தஞ்சை' என்று பெயர் வந்தது. ராவணன், தான் பெற்ற தவவலிமையால், குபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற பல சிவன் கோயில்களுக்கும் சென்றான்.
தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான். தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன் "தஞ்சபுரீஸ்வரர்' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். குரேபன் வழிபட்டதால் "குபேரபுரீஸ்வரர்' என்ற பெயரும் ஏற்பட்டது.
சிறப்பம்சம்: குபேரன் இங்கு வந்ததைக் குறிக்கும் வகையில், தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சந்நிதி முன்புள்ள தூணில், குபேரன் சிற்பம் இருக்கிறது. சரஸ்வதி இங்கு இருப்பதால், கல்விச்செல்வமும் பெறலாம். விநாயகர், ஆனந்தவல்லி சந்நிதிகளும் உள்ளன. 

இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் ரோட்டில், ஊர் எல்லையில் கோயில் உள்ளது. 
திறக்கும் நேரம்: காலை 6 -11, மாலை 4- இரவு 8.
போன்: 04362 - 223 384, 85.

No comments:

Post a Comment