Monday, December 8, 2014

கருகாவூர் கற்பகம்

திருக்கருகாவூர்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கருகாவூருக்கு -

வசிஸ்டர் வணங்கிய குருஸ்தலமாகிய திட்டை, பாகவதமேளா நிகழும் மெலட்டூர்  வழித்தடத்திலும், மகமாயி வீற்றிருக்கும் புன்னைநல்லூர், சாலிய மங்கலம் வழித்தடத்திலும் - தொடர்ந்து  பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தஞ்சை - கும்பகோணம் (சாலை அல்லது ரயில் ) வழியில் - பாபநாசத்தில் இறங்கிக் கொண்டால் அங்கிருந்து 5 கி.மீ. தொலைவு - திருக்கருகாவூர்.

திருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசு சுவாமிகளும் பாடிப் பரவிய திருத்தலம் - திருக்கருகாவூர்.


ஞானசம்பந்தப் பெருமான் - தமது திருப்பதிகத்தில் (3/46)  - முல்லை கமழ்கின்ற கருகாவூர்கடிகொள் முல்லை கமழுங்கருகாவூர்கந்த மௌவல் (மௌவல் எனில் முல்லை) கமழுங்கருகாவூர்தண் முல்லை கமழுங்கருகாவூர் - என முல்லை வனத்து எம்பெருமானைப் புகழ்கின்றார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் - தமது திருத் தாண்டகத்தில் (6/15)

உலகில் மற்ற உயிர்கள் தோன்றும் முன்னே - அவை எல்லாவற்றுக்கும் கருவாய்த் தோன்றிய கருப்பொருள் என்பதோடு மட்டுமல்லாமல் - அவை அனைத்துக்கும் கண்ணாகும் எந்தை கருகாவூரார் - என்று நெகிழ்கின்றார்.

thanjavur

மேலும்  - பொதுத் திருத்தாண்டகத்தில்(4/15/6) , கருகாவூரிற் கற்பகத்தை என - மெய்சிலிர்க்க வர்ணிக்கும் நாவுக்கரசர் பெருமான் - திருவீழிமிழலைத் திருத் தாண்டகத்தில்(6/51/6),

இன்சொற் கரும்பனையாள் உமையோடுங்கருகாவூரார்  -  

கரும்பின் இன்சுவையைப் போலும் மொழியுடைய உமாதேவியோடு - நமக்கெல்லாம் நன்மைகளை வாரித் தருகின்ற கருகாவூர் கற்பகம் - என நமக்கு அடையாளங் காட்டுகின்றார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள்  தம்முடைய ஷேத்திரக் கோவையில் (7/47) ,

காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகாவூரானே!..

- என சிறப்பித்துப் பாடுகின்றார்.

(நன்றி - பன்னிரு திருமுறை, சீர் வளர் சீர் தருமபுர ஆதீனப் பதிப்பு.)

நந்தி மற்றும்  விநாயகர் திருமேனிகள் உளி படாத விடங்கத் திருமேனிகள்.

thanjavur
ஸ்ரீ விடங்க நந்தி (செந்நிற திருமேனி)
முல்லைவன நாதர்  சுயம்பு மூர்த்தி. லிங்கத்திருமேனி புற்று மண்ணால் ஆகியது. எனவே அபிஷேகங்கள் ஆவுடைக்கே நிகழும்.  திருமேனியில் -  முல்லைக் கொடி சுற்றிப் படர்ந்த தழும்பினை தீபஒளியில் தரிசிக்கலாம்.

திருத்தல விநாயகர் கற்பக விநாயகர் என வழங்கப்படுகின்றார்.

திருநாவுக்கரசரின் திருத்தாண்டகத்தின் வாயிலாக நாம் அறியும் கருகாவூர் கற்பகம் எனும் திருவாக்கு நேரிடையாக சிவபெருமானைக் குறிப்பதாயினும் - பெருமான் - தம் அன்பு மகனுக்கு அந்தப் பெருமையைக் கொடுத்து விட்டனர் போலும்


முதல் திருச்சுற்றில் கன்னிமூலையில் கணபதி சந்நிதியில் ஸ்ரீ பூர்ணா - புஷ்கலை தேவியருடன் ஐயனார் அருள் வழங்கி வீற்றிருக்கின்றார்.
ஐயனின் இடப்புறம் வள்ளி தெய்வானை சூழ - வடிவேல் முருகனின் சந்நிதி. 

இரண்டாம் திருச்சுற்றில் கிழக்கு நோக்கிய அன்னையின் சந்நிதி . 

அழகிய நந்தவனமாக அமைந்துள்ள மூன்றாம் திருச்சுற்றில் ஆலயத்தை வலம் வரும் போது சோமாஸ்கந்த பிரதக்ஷிணமாக அமைகின்றது. தவிர திருக்கோயிலில் கோசாலையும் உள்ளது.

திருக்கோயிலின் எதிரில் காமதேனு பொழிந்த க்ஷீர புஷ்கரணி - திருப் பாற்குளம் எனும் தீர்த்தம்.
க்ஷீர புஷ்கரணி
மூர்த்தி, தலம், தீர்த்தம் என - மூன்றினாலும் பெருஞ்சிறப்புடைய இத்தலத்தில் என்றைக்கும் மங்கல நிகழ்வுகளைக் காணலாம்.

பிள்ளை வரம் கேட்டு வரும் இளம் தம்பதியர்  ஒரு புறம்.

அடிக்கடி கரு நழுவும் குறைபாடு நீங்கி  மணிவயிற்றில் மகவு தங்க வேண்டும் என  - மடியேந்தி வரும் இளம் பெண்கள் ஒருபுறம்.

அம்மையப்பன் அருளால், கரு நின்ற பின் - நன்றியறிதலின் அடையாளமாக -  உற்றார் உறவினர் சூழ - வளைகாப்புச் சடங்குளை, திருக்கோயிலிலேயே நிறைவேற்றி மகிழும் குடும்பத்தினர் ஒரு புறம்.

நல்ல முறையில் சுகப்பிரசவம் ஆன பின் தாயும் சேயுமாக வந்து - இங்கே தொட்டிலில் இட்டு சீராட்டி, பெயர் சூட்டி மகிழ்வோர் ஒருபுறம். 

அதன் பின்னும், அன்னையின் அருளால் - தாம் பெற்ற அன்புச் செல்வத்திற்கு  இங்கேயே முடியிறக்கி, மங்கலகரமாக காதணி அணிவித்து, கைகூப்பித் தொழுது - கசிந்து உருகி நிற்போர்  ஒரு புறம்.

எல்லாவற்றுக்கும் காரணம் - கர்ப்ப ரக்ஷாம்பிகையின் அளப்பரிய அருளுடன், அவள் சந்நிதி வாசலின் திருப்படியினில் மெழுகிடும்  - நெய் தான்!..

ஆம்!... குறைபாடுகளுடன் குமுறும் இளம் பெண்களின் -

கருவறை வாசல் திறக்கக் காரணமாவது  -
  அன்பெனும் அடையா நெடுங்கதவுடன் திகழும், 
அன்னை கர்ப்ப ரக்ஷாம்பிகையின் கருவறை வாசலே!..

இத்திருத்தலத்தில் பிரத்யேகமாக நிகழ்வது  - ''நெய்யிட்டு படி மெழுகுவது''. 

கருத்தரிக்காமலேயே இருப்பது, அடிக்கடி கரு நின்று நழுவுவது - எனும் குறைபாடுகளை உடைய இளம் பெண்கள் அன்னையிடம் பிரார்த்தித்து, அர்ச்சனை செய்து  - சுத்தமான பசு நெய் கொண்டு அன்னையின் சந்நிதி வாசல் படியினை மெழுக வேண்டும்.

அர்ச்சனை முடிந்து தீப ஆராதனை நிறைவுற்ற பின்,  அந்த நெய்யை வழித்து சுத்தமான கிண்ணத்தில் சேகரித்துக் கொண்டு, தினமும் இரவில் சிறிதளவு அருந்த வேண்டும் என்பது நியதி.

மெழுகி எடுத்த நெய் தீர்கின்ற நிலையில் -  பசு நெய் வாங்கி, அம்பிகையின் பெயரை உச்சரித்து தாமே அதில் மீண்டும் கலந்து கொள்ளலாம்.
 
நெய்யினால் மெழுகப்படும் நிலைப்படி  - கவசமிட்டு பாதுகாக்கப்படுகின்றது.

thanjavur
அன்னையின் கருவறை விமான தரிசனம்
இன்றைய நாட்களில், வேறு பல காரணம் கொண்டு - இளந்தம்பதியரில் - மணாளனுக்கு  உயிர் அணுக்கள் குறைவு எனும் பிரச்னை ஏற்படுகின்றது.

அதை வைத்துக் கொண்டு, நவீன மருத்துவமும் பழைமையான நமது வைத்தியமும் ஆளுக்கு ஒரு கருத்தினைப் பேசி - இளைஞர்களைக் குழப்பிக் கொண்டிருந்தாலும்  - அந்தக் குறைபாட்டினையும்  தீர்த்து வைப்பவள்  - கர்ப்ப ரக்ஷாம்பிகையே!..

தம் சந்ததி விளங்கும் பொருட்டு - அன்னையின் சந்நிதி வாசல் படியினை மெழுகி எடுக்கும் நெய்யினில் சிறிதளவு ஒருமித்த சிந்தையுடன் தம்பதியர் இருவரும் - இரவில் அருந்த வேண்டும்.

அத்துடன் ஆடவரும்  - தமக்கு எவற்றால் எல்லாம் ஆண்மைக் குறைவு ஏற்படுகின்றதோ - அவற்றினைக் கண்டுணர்ந்து அவற்றில் இருந்து நீங்கி- நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்!..

சரியான மாதசுழற்சியின்றி  அவதிப்படும் நிலையில் உள்ள பெண்களும்  - கர்ப்பப்பை பலகீனமாக உள்ளவர்களும் இவ்வாறே அனுசரித்து குறை நீங்கப் பெறலாம்.

இந்த நெய்யினை அருந்தும் காலத்தில் தம்பதியர் புலால் உணவினை நீக்குவது  நல்லது.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் கர்ப்பப்பை பழுது எனும் கொடும் சூழ்நிலை நேரும் போது கூட,   கர்ப்பரக்ஷாம்பிகை  - கை கொடுக்கின்றாள்.

குறை ஏதும் இல்லை எனினும் - பருவமடைந்த பெண்கள், இளந்தம்பதியர் - என, அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம்  - திருக்கருகாவூர்.


அல்லலுற்று ஆற்றாதழுபவர் - எவராயினும் சரி... 
அவர் தம் கண்ணீரை -
கருணையுடன் துடைத்து விடுபவள் கர்ப்ப ரக்ஷாம்பிகை!...
 
மாற்று சமயத்தினர் கூட - 
இங்கு வந்து வணங்கி நலம் எய்துகின்றனர் எனில் -
அன்னை அவள் அல்லால் ஏது கதி!...

 கருகாவூர் கற்பகத்துடன் அமர்ந்த கார்முகிலாள் 
கரும்பனைய இன்சொலாள் -  கரு காத்தநாயகி
இன்னலுற்றார்க்கும் இடுக்கண்பட்டார்க்கும் 
நவிலும் நல்வாக்கு,

நானிருக்கின்றேன்!..

அதனால் தான்  வாழ்க்கை இனிக்கின்றது!..
அவளால் தான் வம்சம் தழைக்கின்றது!..

No comments:

Post a Comment