Monday, December 8, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 6

புத்தம் புது காலை பூத்தது போல புதிதாய் எழுந்தாள் லீலா!..

மேனி எங்கும் ஒரு மாற்றம். இது நல்லதற்கா!.. கெட்டதற்கா!.. 

எதிரே குரு சுக்ராச்சார்யார்!..

அவரது திருவடிகளைப் பணிந்தாள்.


''..  இனி  எனக்கு தாயும்  தந்தையும் - தாங்களே!.. தங்களால் நான் மீண்டும் பிறந்தேன்!.. என்னை அருட்கண் கொண்டு நோக்குங்கள் குருவே!..'' 

சுக்ராச்சார்யாரை வலம் வந்து வணங்கினாள்!..

''..மகளே!.. முதலில் உன்னை வெல்வாயாக!.. அதன் பின்னே அண்ட சராசரங்களும் உனக்கு அடிமையாகும்!.. புகழ் கொண்டு வாழ்வாயாக!.. மேலும் மேலும் உயர்ந்து எல்லோரும் போற்றி வணங்கும் நிலையை அடைவாயாக!..''

''..எனக்கு ஞான உபதேசம் செய்யுங்கள் ஸ்வாமி!..''

''..மகளே!.. நன்மையும் தீமையும் விரவிக் கிடப்பதே வாழ்க்கை. மனிதர்களாயினும் சரி.. தேவர்களாயினும் சரி.. ஏன் எல்லாவற்றையும் கடந்த மகரிஷிகள் கூட,  இவற்றுக்குத் தப்பிப் பிழைத்தாரில்லை!.. இருள் சேர் இரு வினைகளாகிய இவற்றைக் கடந்து முழுமையாக வெளிவரும் போது - வாழ்ந்த வாழ்க்கை அமரத்துவம் ஆகின்றது. அதுவே சாயுஜ்யம் எனும்  பெருவாழ்வு!.. அந்த நிலையை அடைய காலம் பலவாகும்!..''

''..அப்படி எனில், எளிதாக அந்த நிலை சித்திக்க வழியில்லையா!..''

''..இருக்கின்றது.. மகளே!.. புலன்களை ஒருமுகப்படுத்தி - யோக நிலையில் இருந்து - நான்முக ப்ரம்மனைக் குறித்து நீடு தவம் செய்!.. பிணி மூப்பு சாக்காடு இவற்றை வெல்லும் வரத்தினைக் கேள்!.. உனக்கு மங்கலம் உண்டாகட்டும்!..''

மீண்டும் நல்வாழ்த்துக்களுடன் - பிரத்யேகமான சில மந்த்ரங்களை உபதேசம்  செய்வித்தார் - சுக்ராச்சார்யார். 

அந்த மந்த்ர பிரயோகத்தினால் தவ வாழ்வு மேற்கொள்வோர்க்கு பசி தாகம்  இயற்கையான உடல் உபாதைகள்  எதுவும் தோன்றாது - என்பது திருக்குறிப்பு. 

மேரு மலைச் சாரலில் தவம் மேற்கொள்ள யத்தனித்த - சிறு பொழுதுக்கெல்லாம் லட்ச லட்சமாய் அசுர கணங்கள்  - ஜயகோஷத்துடன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.


''..மகளே!.. அண்ட பகிரண்டம் எங்கும் பரந்து கிடக்கும் - இந்த அசுர கணங்களுக்கு உன்னைத் தலைவி ஆக்குகின்றேன்!..ஜய விஜயீ பவ!..''

''ஓ'' - என்று எழுந்த பேரிரைச்சல் - எட்டுத் திக்கிலும் எதிரொலித்தது!..

அங்கே  - அமரலோகத்தில் அன்னத்தின் தூவிகளுக்குள் பொதிந்து கிடந்த தேவேந்திரன் - ''..என்ன கூச்சல்?..'' - என்றபடி எழுந்து அமர்ந்தான்.

அடுத்த சில கணங்களுக்குள் - புதிதாய் தகவல் வந்தது.  அசுரர்களுக்குப் புதிய தலைமை கிடைத்து விட்டது. அந்தத் தலைமை - தலை நான்குடைய தவமகனின் தயவினை வேண்டித் தவம் இயற்றுகின்றது - என்று!..

அதன் பிறகு  - தேவேந்திரனின் தூக்கம் பறி போயிற்று!..

தேவர்கள் ஒன்று கூடி மறுபடியும் கைகளைப் பிசைந்து கொண்டார்கள்.  எந்தப் பக்கம் ஓடலாம் என்று - ஐராவதம் - யோசிக்க ஆரம்பித்தது.

இந்திராணி எடுத்துக் கூறினாள். ''..சஞ்சலம் வேண்டாம். சர்வேஸ்வரனிடம் சென்று சரணடையுங்கள்!..''  - என்று.

''..இதெல்லாம்  - சின்னஞ்சிறு விஷயம்!.. நாங்களே இதற்கு ஒரு முடிவு கட்டி விடுவோம். நீ கலங்காதே!..'' - என ஆறுதல் கூறி விட்டு - சபையைக் கூட்டினான். 

அவசரக் கூட்டம் ஆதலால் - ஆடல் பாடல் கேளிக்கை கொண்டாட்டம் என எதுவும் இல்லை!.. அநேகமாக, இதுவே - கடைசிக் கூட்டமாக இருக்கலாம்!..

ரம்பைக்கு அதிர்ச்சி!.. 

ஊர்வசி சொன்னாள் - ''..யாரோ லீலா..வாம்!..''

''..லீலாவா!.. அப்படியானால் -  நாம் தப்பித்தோம்!..''

''.. ஆனாலும், கோரமாக கொடூரமாக இருக்கின்றாளாம்..ப்பா!..''

''.. இருந்தால் என்ன?.. அவளையும் அலங்கரித்து நம்மைப் போல  அழகாக ஆக்கி விட்டால் போகின்றது!..''

''..ஏய்!.. ரம்பா!.. அதற்கெல்லாம் வழியே இல்லை!.. அவள் எருமைத் தலையோடு இருக்கின்றாளாம்!..''

''..என்ன!.. எருமைத் தலையா?..'' - அதிர்ச்சியடைந்த ரம்பை, மேனகை - என அனைவரும் மயங்கி விழ, அதைப் பார்த்த ஊர்வசியும் மயங்கி விழுந்தாள்.

இங்கே - அரம்பையர் அரங்கம் அதிர்ச்சியடைந்து கிடக்க - அங்கே தேவேந்திரன் சபையில்,

கடுந்தவம் இயற்றும் மகிஷியின் மன உறுதியைக் குலைக்கும் வேலையை -   செயல் திட்டத்துடன்  முடுக்கி விட்டனர். 

யோக நிலையில் அக்னியாய் தகித்துக் கொண்டிருந்த - மகிஷிக்கு முன் தேவர்களின் தந்திரங்கள் எல்லாம் பயனற்று தீயில் விழுந்த சருகுகளாயின. வெற்றிகரமாகத் தலை தாழ்ந்து நின்றனர்.  

இந்திரனின் நினைவில் - மன்மதன் வந்தான். பூங்கணைகளை எய்தான்.


ஒரு நொடியில் - வறண்டு கிடந்த அந்த வனம் பூத்துக் குலுங்கியது. புதுத் தென்றல் வீசியது. அந்த சுகந்தம் மகிஷியை சற்றே அசைத்தது. அசைந்த மகிஷி அதிர்ந்தாள். 

தன்னை அறிந்தாள். தன் நிலையை உணர்ந்தாள். சுக்ராச்சார்யார் உபதேசித்த மந்த்ரங்களை உச்சரித்து - மாய வாள் ஒன்றினை ஏந்தினாள்.

அதைக் கண்ட மன்மதன் - அஞ்சி நடுங்கி ஓடிப் போனான்.

ஒருகணம் யோசித்தாள் - மகிஷி.

''..கடுந்தவம் மேற்கொண்டு  - காலங்கள் பல கடந்தும் கருணையுடன் காட்சி நல்க - ஏன் இன்னும் வரவில்லை - நான்முகன்?.. என்ன பிழை செய்தேன்!..''

''..என் நிலை கண்டு இன்னும் இரங்காததேன்?.. திசைக்கு ஒன்றாய் திருமுகம் இருந்தும்  - திருவருள் கொண்டு, என்னைத் திரும்பிப் பார்க்காததேன்?.. குற்றமே செய்த கொடிய மகன் ஆனாலும் புத்திர வாஞ்சையுடன் பொறுப்பது கடன் அல்லவா!..''

''..அப்படியிருக்க - குற்றம் ஏதும் செய்யாத என் முன் தாங்கள் வந்தருள - தடையாய் இருப்பது எதுவோ?.. எதுவாயினும் சரி!.. என் முன் வருவதைத் தாங்கள் தவிர்த்தீர் எனில் - என்னுடல் நீத்து - நான் தங்கள் முன் வருவேன்!..''

- சூளுரைத்த மகிஷி - தன் கை வாளால், தன் சிரத்தினைத் தானே சேதித்துக் கொண்ட போது - பெருங்கருணையுடன் அங்கே சதுர்முகன் தோன்றி நின்றார்.


மகிஷி அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. 

அப்போதே - ''..அழிந்தது அமரர் பெருங்கூட்டம்!..'' - என அகமகிழ்ந்தாள்.

''..மகிஷி!.. வேண்டுவன கேள்!..'' - என்றார் நான்முகன். 

''..தந்தையே!.. தாங்கள் எனக்கு மரணமில்லாப் பெருவாழ்வினை பிரசாதிக்க வேண்டும்!..''

''அது இயலாதது. மகிஷி - அண்டபகிரண்டங்கள் கூட ஒருநாள் அழிந்து போகக் கூடியவை!.. அழிவில்லாதது என எதுவுமே இல்லை!.. அயன் எனப்படும் நானும் ஒரு நாள் ஹரியுடன் ஒன்றிவிட,  ஹரியும் ஒரு நாள் ஹரனுடன் ஒன்றி விடுவார். சகல லோகங்களும் அவர்களுக்குள் சங்கமமாகி விடும் . ஆகவே வேறு ஏதாவது கேள்!..''

''..அப்படி எனில் -  

அந்த ஹரி ஹரன் சங்கமத்தினால் விளையும் வித்தினால் அன்றி வேறொன்று எதனாலும் எனக்கு மரணம் நேரக்கூடாது என வரம் அளியுங்கள் ஸ்வாமி!..

அத்துடன் அந்த வித்தும் மண்ணில் தோன்றியதாக - ஒரு தாயின் கருவறை தங்காத - தங்க மகனாக இருக்க வேண்டும்!..''

''..அப்படியே அளித்தேன்!.. மங்கலம் உண்டாகட்டும்!..''

அதுவரையிலும் தலை வணங்கி நின்ற மகிஷி தலை நிமிர்ந்தாள். பெருங்குரலெடுத்துச் சிரித்தாள். 

''..ஏன் சிரிக்கின்றாய் மகிஷி!..''

''..ப்ரபோ!.. நான் தங்களை வென்று விட்டேன்!..''

''.. என்னை வென்றாயா!.. எப்போது?..''

''.. தேவரீர்!.. சிந்திக்க வேண்டும். ஆங்கோர் வித்து விளைய பெண்மை என்ற ஒன்று வேண்டுமே!. அப்படியிருக்க,

ஹரி ஹர சங்கமம் என்பதும் அதனால் ஒரு வித்து விளையும் என்பதும் அசம்பவம்.  பெண்மை இன்றிப் பூவுலகில் பிறப்பு என்பது ஏது!.. 

எனவே - எனக்கு மரணம் என்பதே இல்லை!.. அதுவும், கருவறை தங்காத - தங்க மகன்!.. உலகில் ஆகக்கூடிய காரியமா!..''

மீண்டும் சிரித்தாள்.. தன்னுடைய இலக்கை   - தான் எய்தி விட்ட களிப்பில் - சிரித்தாள்!..

''.. மகிஷி!.. என்னையும் உன்னையும் ஆட்டி வைக்கும் அந்தப் பரம் பொருளின் நாட்டம் அல்லாமல் எதுவும் நடவாது. எல்லாம் வல்ல சிவம் இயக்கும் நாடகம் முன்னமே வடிவமைக்கப்பட்டு விட்டது. ஈசனின்  திருவிளையாடல்கள் வெளிப்படும்போது,  ஒருவருக்கு ஒருவர்  விரும்பிய   -   கதாபாத்ரங்களாக  நாமே ஆகி நடிக்கின்றோம். ஆகவே - உன் எண்ணம் போலவே மங்கலம் உண்டாகட்டும்!..'' 

- என புன்னகையுடன் மொழிந்தார் நான்முகன்.

அந்தப் புன்னகையின் ஊடாக - பல்வேறு அர்த்தங்கள் பொதிந்திருந்ததை மகிஷி உணர்ந்தாளில்லை!..

நான்முகனின் வரத்தினால்  - மகிஷிக்கு சகலமும் சித்தியாகின.

முதலில் தன் மேனியை உற்று நோக்கினாள். கடுந்தவத்தினால் - கொடூரமாக மாறி இருந்த மேனி சுந்தர ரூபமாக மாறியது. மேனி முழுதும் நறுமணம். அவள் மேனியில் பட்டு பீதாம்பரங்களுடன் வைர வைடூர்ய மரகத மாணிக்கங்கள்  கண்களைப் பறித்தன.

இது போதும் என்று தோன்றினாலும், பெண்மையின்  உள் மனம் ஏதோ ஒன்று குறை என்று சொல்லியது.

அங்கே - குரு சுக்ராச்சார்யார் தோன்றினார். அவரைக் கண்டதும் உற்சாகமான மகிஷி சந்தோஷத்துடன் பணிந்து வணங்கினாள்.

அவளைக் கண்டு மிகவும் பெருமை கொண்டார்.

''..என்ன இருந்தாலும் ஆதியில் இவள் நம்மைப் போல ஒரு குருவின் மகள் எனத் தோன்றியவள் தானே!.. அது தான் இன்னும் பணிவும் பக்தியும் தொடர்ந்து வருகின்றன!..'' - என்று உள்ளம் பூரித்தது.

''..ஆனாலும் மகிஷி!... நீ வரம் என்று கேட்டாயே - ஹரிஹர புத்ரன்!..''

''.. அதெல்லாம் நடவாத காரியம் குருநாதா!..''

''..இல்லை.. மகிஷி!.. நான் சொல்ல வந்தது என்னவென்றால்!..''

''..ஸ்வாமி!.. இனி - வயதான காலத்தில் தங்களுக்குத் தேவை - பரிபூரண ஓய்வு!.. அத்துடன் வருங்காலம் இளையோராகிய எங்கள் கையில்!.. ஆகவே - இனி நீங்கள் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் ஓய்வெடுங்கள்!.. அடேய்!.. யாரங்கே!.. குருநாதரை மரியாதையுடன் ரத்ன பல்லக்கில் அழைத்துச் செல்லுங்கள்!..''

''..சரி!.. விதி யாரையும் விட்டு வைப்பதில்லை!..'' - என்றவராக, மெல்ல நடந்தார் சுக்ராச்சார்யார்.

  
அருட்பெருஞ் ஜோதியாகிய சிவம் -  அனைத்தும் சரியாக 
நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தது!..

அலைகடலென ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அசுரப் பெருங்கூட்டத்தைத் தன் கண்களால் அளந்தாள் - மகிஷி.

''..அடுத்த இலக்கு?..''

''..தேவேந்திரன்!.. எங்கே அவன்?.. தேடிப் பிடியுங்கள் அவனை!.. ''

மகிஷி வெற்றிக் களிப்புடன் சிரித்தாள். 
அவளைக் கண்டு காலதேவனும் சிரித்தான்!..

ஸ்ரீ ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

No comments:

Post a Comment