Monday, December 8, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் -1

ஐப்பசியும்  கார்த்திகையும்  - அடை மழைக்காலம். அடுத்து வரும் மாதமாகிய மார்கழியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்!..

இத்தகைய சூழலில் கார்த்திகை மாதத்தின் முதல் நால் மாலையணிந்து கடும் விரதம் மேற்கொண்டு - ஒரு மண்டல காலம் அல்லது தை முதல் நாள் மகர ஜோதி தரிசனத்துடன் விரதத்தை நிறைவு செய்யும்  பக்தர்கள் லட்சோப லட்சம் என - நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றனர்.

''..எங்க வீட்டுலேயே குருசாமி. அவரோட நானும் மூணு வருஷமா ஜோதி பார்த்திருக்கிறேன்!..'' - என்று சொல்லும் பாக்கியத்தம்மாள்.

''..எங்கஅப்பாவுக்கு இந்த வருஷம் பதினெட்டாவது மலை!..'' - என்று பெருமை கொள்ளும் சந்திரசேகரன்.

''..இந்த வருஷம் என் தம்பி கன்னி சாமி!..'' - என்று சந்தோஷப்படும் கெளரி.

''..எங்க சுதாவும் அவங்க அப்பாவோட இந்த வருஷம்  மாலை போட்டுக் கொண்டிருக்கின்றாள்!..'' - என்று குதுகலிக்கும் சரண்யா.

இவர்களை - அநேகமாக எல்லா ஊர்களிலும் காணலாம்.

இப்படி கணவரோ, தந்தையோ, சகோதரனோ, மகனோ, மகளோ - மலைக்குச் செல்லும் போது - 

அவர்களுடன் தாமும் ஆசார அனுஷ்டானங்களில் ஒன்றியிருந்து எல்லா நியமங்களையும் குறைவின்றி செய்வதிலும் செய்விப்பதிலும் முன் நிற்பது - அன்பும் அருளும் ஒன்றிணைந்து-  திருவடிவாகத் திகழும் பெண்மையே!..

அந்தப் பெருமைக்குரிய பெண்மையைக் காப்பதற்கு -  வந்தவர் தான் -

ஸ்ரீ தர்ம சாஸ்தா!.. 

மா சாத்தன் - எனப் பழந்தமிழில் போற்றப்படுபவர் இவரே!..

கந்தனின் கருணையைப் புகழ்ந்திடப் பிறந்த கந்த புராணத்தில் - ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம் - மா சாத்தப் படலம் என்றே  வழங்கப்படுகின்றது.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட அசுரர்கள் - அமுத கலசத்தைப் பறித்துக் கொண்டு ஓடி விடுகின்றனர். 

கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் தவித்த தேவர்களுக்கு உதவி புரியவும், அமுதக் கலசத்தினை அசுரர்களிடம் இருந்து மீட்கவும் - ஸ்ரீமஹாவிஷ்ணு திருவுளங்கொண்டார்.

அதன் விளைவாக - ஜகன் மோகினி எனத் திருக் கோலமுங் கொண்டார்.

விஷ்ணு மாயையில் மதிமயங்கிய அசுரர்கள் - ''ஆரணங்கே சதம்!..'' என்று,   அமுத கலசத்தினை நழுவ விட்டனர். 

மோகினியாக நின்ற மஹாவிஷ்ணுவும் - அசுரர்களிடமிருந்து அமுதத்தை மீட்டு தேவர்களுக்கு அளித்தார்.

அவ்வேளையில்,  ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ் சோதியாகிய சிவபெருமான் - அழகே உருவான மோகினியின் திருக்கரத்தினை வாஞ்சையுடன் பற்றிட - தேவ சங்கல்பத்தின்படி நிகழ்ந்ததே ஸ்ரீ தர்ம சாஸ்தா திருஅவதாரம்!..

அச்சமயம் அம்பாளே - அச்சுதனாக நின்றாள் - என்றும் ஒரு மறைபொருள் உண்டு. 

அம்பிகை - ஜகன்மோகினி, கோவிந்தரூபிணி, நாராயணி, சியாமளி - எனும் திருநாமங்களைக் கொண்டு விளங்குபவள். பரந்தாமனைப் போலவே பச்சை வண்ணமும் நீலமேக சியாமள வண்ணமும் கொண்டு இலங்குபவள்.

எரியலால் உருவமில்லை ஏறலால் ஏறலில்லை 
கரியலால் போர்வையில்லை காண்டகு சோதியார்க்குப் 
பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென்று ஏத்தும் 
அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே!.. (4/40)

- என, ''ஸ்ரீமந்நாராயண மூர்த்தியும் அம்பிகையும் ஒருவரே!..'' - என்ற விஷயத்தை நமக்கு உரைப்பவர் திருநாவுக்கரசு சுவாமிகள்.


மாதொரு பாகனாக எம்பெருமான் திகழும் போது ஐயனின் இட பாகமாகிய வாமபாகம் அம்பிகைக்கு உரியது.


அதே சமயம் எம்பெருமான் - சங்கர நாராயணர் எனத் திருக்கோலங் கொள்ளும் போது -  அதே வாமபாகம் ஸ்ரீமந்நாராயணர்க்கு உரியது.

இப்படி ஹரிஹர சங்கமத்தில் - திருக்கரத்தில் பூச்செண்டுடன் ஒளி வடிவாகத் தோன்றிய  மூர்த்தியே,

ஸ்ரீஹரிஹர புத்ரன் - எனும் ஸ்ரீ தர்ம சாஸ்தா!..

இவர் தோன்றிய அப்போதே - அண்ட சராசரங்களையும் காத்து ரக்ஷிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவேதான் இவர் லோக ரக்ஷகர் எனப் புகழப்படுகின்றார்.  இவ்வாறு பட்டம் சூட்டப்பட்ட ஸ்ரீ தர்மசாஸ்தா திருமணக் கோலம் கொண்டார்.


சத்யபூரணர் எனும் தபஸ்வியின் குமாரத்திகளான பூர்ணகலா தேவியும் புஷ்கலா தேவியும் மணக்கோலம் கொண்டு - ஸ்வாமியுடன் ரத்ன பீடத்தில் அமர - முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்த்தி மகிழ, திருமாங்கல்ய தாரணம் நிகழ்ந்தது.

காருறழ் வெய்ய களிற்றிடையாகிப் 
பாரிட எண்ணிலர் மாங்குற நண்ணப் 
பூரணை புட்கலை பூம்புற மேவ 
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்!.. 

- என்று கந்த புராணத்தில், கச்சியப்ப சிவாச்சார்யார் - ஸ்ரீ ஐயனாரின் திருத் தோற்றத்தினைக் காட்டுகின்றார்.

ஸ்ரீ ஐயனார் வழிபாடு தொன்மையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீஐயனார் - என தமிழகத்தின் பற்பல கிராமங்களிலும் திகழும் காவல் தெய்வம் இவரே!..

சிறை காத்த ஐயனார்கற்குவேல் ஐயனார்அடைக்கலம் காத்த ஐயனார்ஏரி காத்த ஐயனார்அருஞ்சுனை காத்த ஐயனார்கரை காத்த ஐயனார்  - என்னும் திருப்பெயர்கள் எல்லாம் - ஸ்ரீ ஐயனார் மக்களுக்கு ஆற்றும் மகோன்னதமான அருஞ் செயல்களின் பொருட்டு சூட்டப்பட்டவை.

அடைக்கலம் காத்த எனும் சொற்குறிப்பு -  ஐயனார் ஒருவருக்கே உரியது.

அங்கண் மேவி அரிகர புத்திரன் 
சங்கையில் பெருஞ்சாரதர் தம்மொடும் 
எங்குமாகி இருந்தெவ்வுலகையும் 
கங்குலும் பகல் எல்லையுங் காப்பனால்!..


ஸ்ரீ ஐயனார் - பெரும் சைன்யத்தை உடையவர். பூத ப்ரேத பேய் பிசாசங்களை அடக்கி ஆள்பவர். மண்ணையும் மக்களையும் வயற்காட்டையும், ஏரி குளம் எனும் நீர்நிலைகளையும் கால்நடைச் செல்வங்களையும் கட்டிக் காப்பவர்.

ஸ்ரீ ஐயனார் வழிபாடு முறையாக நடைபெறும் கிராமங்களில் கள்வர் பயம் என்பதே இருக்காது. ஸ்ரீ ஐயனார்  வெள்ளைக் குதிரையில் ஆரோகணித்து - தனது சேனைகளுடன் - நள்ளிரவு நேரத்தில் ஊர்க்காவல் மேற்கொள்வார் என்பது இன்றளவும் மெய்ப்பட விளங்கும்.

பெண்மையைக் காத்தருளிய பெருமானைப் பற்றி - அடுத்த பதிவில் காண்போம்!..

ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹர புத்ர 
ஸ்வாமியே சரணம்!.. சரணம்!..

No comments:

Post a Comment