Saturday, November 22, 2014

நவாவரண பூஜையில் ஸ்ரீசக்ர நாயகி!


                                                நவாவரண பூஜையில் ஸ்ரீசக்ர நாயகி!




ஒரு குழந்தையின் பலமே அதன் தாய்தான். அந்தத் தாயே குருவாகவும் விளங்கினால், அதைவிட பெரும் பாக்கியம் வேறு எதுவாக இருக்க முடியும்? கருணையே வடிவாய் உலகைக் காத்து ரட்சிக்கும் ஜெகன்நாயகி ஸ்ரீராஜராஜேஸ்வரி லோக குருவாக திகழ்கிறாள். இந்த சர்வேஸ்வரி மஹாமேருவில் நடுநாயகமாய் கொலு வீற்றிருக்கிறாள். இந்த மஹாமேருவின் அமைப்பையே யந்திரங்களில் ஸ்ரீசக்கரமாய் உருவகப்படுத்துகிறார்கள்.


ும்மூர்த்திகள், மூன்று குணங்கள், முக்காலங்கள், மூன்று அவஸ்தைகள் என மும் மூன்றாகக் குறிக்கப்படுவது அனைத்தும் சக்தியின் ஸ்வரூபம். இதன் காரணத்தினாலேயே சக்தியானவள் திரிபுரசுந்தரி என்று அழைக்கப்படுகிறாள். திரிபுர சுந்தரி என்றால் மூவுலகதிலும் அழகானவள் என்று பொருள். சக்தி வழிபாட்டில் மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற மூன்றையும் முக்கோணத்தின் மூன்று மூலைகளாகக் குறிப்பிடுவர். சக்தி வழிபாட்டில் வாயினால் செய்யப்படும் மந்திர உச்சாடனத்தின் வலிமையை, கருத்தை வரைபடமாக உருவகப்படுத்துவதே யந்திரம் ஆகும். மற்ற அனைத்து சக்கரங்களுக்கும் மூலமாக ராஜ சக்கரமாக விளங்குவதனால் இதனை "ஸ்ரீசக்கர ராஜ' என்றே குறிப்பிடுவர். இது ஒன்பது படி நிலைகளாக அமைந்திருக்கும். இதனை பூஜிப்பது நவ ஆவரண பூஜை என்று அழைப்பர். ஒன்பது ஆவரணங்கள் கொண்ட அமைப்பாக இருப்பதால் இந்தப் பெயர்.

முதல் ஆவரணம்: மூன்று கோடுகளுடனும் கோயில்கதவு போன்ற நான்கு வாசல்களுடன் கூடிய வெளிப்புற சதுர வடிவம் "த்ரைலோக்ய மோஹன சக்கரம்' எனப்படுகிறது. இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை ஆராதிப்பவர்களுக்கு எந்த சக்தியாலும் இடையூறு ஏற்படாது. நினைவாற்றல் பெருகும்.

இரண்டாவது ஆவரணம்: இந்த ஆவரணத்தில் பதினாறு தாமரை இதழ்கள் இடம் பெற்றுள்ளன. இக்கமல ரூபத்தில் அருளாட்சி செய்யும் காமாகர்ஷிணி முதல் சரீராகர்ஷிணி வரையிலான பதினாறு யோகினிகள் பூஜை செய்பவரின் மன அழுக்கை நீக்குகின்றனர்.

மூன்றாவது ஆவரணம்: எட்டு தாமரை இதழ் கொண்ட இந்த ஆவரணத்தில் வாசம் செய்யும் தேவதைகள் பூஜிப்பவருக்கு தியானம், பூஜை இவற்றில் பரிபூரண ஈடுபாட்டை அளிக்கிறார்கள்.

நான்காவது ஆவரணம்: இந்த ஆவரணத்தில் தேவியானவள் சந்திரனின் வடிவிலே ஜொலிக்கிறாள். 14 கோணங்கள் கொண்ட நான்காவது ஆவரணத்தில் பதினான்கு யோகினிகள் வாசம் செய்கின்றனர். இந்த பூஜையின் பலனாக புத்திர பாக்கியம் கிடைக்கும்.

ஐந்தாவது ஆவரணம்: பத்து கோணங்களைத் தன்னகத்தே கொண்ட இந்த ஆவரணத்தில் சர்வசிதிப்ரதா முதல் சர்வ செüபாக்யதாயிணி வரை பத்து யோகினிகள் அடங்குவர். இங்கு சனீஸ்வரர் ஆட்சி செய்வதாக ஐதீகம். இந்த ஆவரண பூஜை, தேகம், மனம் மற்றும் ஆத்ம பலங்களைத் தருகிறது.

ஆறாவது ஆவரணம்: தேவி இங்கே சூரிய ஸ்வரூபமாய் பிரகாசிக்கிறாள். இதுவும் பத்து கோணங்களைக் கொண்டது. இந்த ஆறாவது ஆவரண பூஜையினால் காம, குரோத, மத மாச்சரியம் நீங்கும். பொறாமை குணம் விலகும்.

ஏழாவது ஆவரணம்: எட்டு முக்கோணங்கள் பெரிய அளவில் இடம் பெற்றுள்ள இச்சக்கரத்தில் எட்டு தேவதைகள் பிரசன்னமாயிருக்கிறார்கள். புதன் இங்கு வீற்றிருக்கிறார். இந்த பூஜையால் ஆன்ம ஞானம், புத்தி சாதுர்யம், நாவண்மை உண்டாகும்.

எட்டாவது ஆவரணம்: இந்த பூஜையில் அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் வழிபடப்படுகின்றன. இங்கு தேவி மஹாதிரிபுரசுந்தரியாய் வீற்றிருக்கிறாள். தேவியின் கரும்பு வில் பாணம் மன்மதனின் காம சக்தியை அழிக்க, அங்குசம் நம் மனதின் தீய எண்ணங்களை அழிக்கிறது. பாசமானது அன்னையிடம் மனதை நிலைக்கச் செய்கிறது.

ஒன்பதாவது ஆவரணம்: அனைத்து ஆனந்தங்களுக்கும் உறைவிடமாய் திகழும் பேரின்பம் எனும் பரப்ரும்ம நிலையில் ஒன்ற வைக்கும் நிர்விகல்ப சமாதி நிலை இதுவே ஆகும். இந்த கோணத்தில் அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கிறார். இதுவே ஸ்ரீசக்ர நவாவரண அமைப்பாகும்.

அன்னை லலிதா திரிபுரசுந்தரிக்கு மஹாமேரு அமைப்பிலேயே ஓர் ஆலயம் வேலூர் மாவட்டம், சோளிங்கரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வீரமங்கலத்தில் எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில், 11 அடுக்குகளாக, பிரம்மாண்ட முறையில் அமையவுள்ளது இந்த ஆலயம். இதன் சிறப்பு அம்சமாக ஸ்ரீசக்ர கோணத்தின் 117 அதிதேவதைகளையும் பிரதிஷ்டை செய்ய உள்ளார்கள். மஹாமேரு கோயிலுடன் தியான மண்டபம், வேதபாடசாலை ஆகியவையும் அமையவுள்ளது.

தகவலுக்கு: 044 - 43564156.


வாரணம் ஆயரம் ஆயினும்  நவாவரண நாயகி அறிவோம்

No comments:

Post a Comment