Friday, October 24, 2014

மூர்த்தி சிறிது;கீர்த்தி பெரிது!




வளம் செழிக்கும் பாலாற்றின் கரையில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றுதான் அவளூர் அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை சிங்கேஸ்வரர் ஆலயம். தாம்பரம் - காஞ்சி சாலையில் வாலாஜாபாத் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது அவளூர்.

பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை உடையது இந்த சிவாலயம். தூண்களுடன் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் என்று அழகுற அமைந்துள்ளது. ""மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது'' என்ற சொல்லிற்கு ஏற்ப மூலவ மூர்த்தியான லிங்கமும், அம்பாளும் உருவங்களில் மிகச் சிறியதாய் காணப்பட்டாலும் பேரருளுடன் திகழ்கிறார்கள். சுவாமியின் மீது தினமும் சூரிய கிரணங்கள் பட்டு வழிபாடு செய்யும் வகையில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு துர்க்கையும், நந்திகேஸ்வரரும் ஆலயத்தில் வெளிப்புறமாகக் காட்சி தருகிறார்கள்.

மன வலிமை, வேலை வாய்ப்பு வேண்டி இவ்வாலயத்தில் பக்தர்கள் வழிபடுகிறார்கள். மூன்று பிரதோஷங்கள் தொடர்ந்து சிங்கேஸ்வரரை வழிபடுபவர்களுக்கு திருமணத் தடை நீங்கும். காஞ்சி மகாசுவாமிகள் பல வருடங்களுக்கு முன்பு காமாட்சியம்மனுக்கும், சிங்கேஸ்வரருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார்கள்.

ஒரு காலத்தில் ஆண்டு முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்த இந்த சிவாலயம் காலப்போக்கில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துவிட்டது. தற்போது இந்து சமய அறநிலையத் துறை ஆதரவுடன் இவ்வாலயத்தின் திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர் கிராம மக்கள். புதியதாக கன்னிமூல கணபதி, சூரிய சந்திரர்கள், பைரவர், கோஷ்ட தெய்வங்கள், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களின் விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. கர்ப்பகிரக விமானம் அமைப்பதற்கான முயற்சியும் நடந்துவருகிறது.

மேலும் தகவலுக்கு: 99621 43347.

No comments:

Post a Comment