Thursday, September 25, 2014

தட்சிணாமூர்த்தி திருக்கோலங்கள்


குரு பகவானாகிய தட்சிணாமூர்த்தி பகவான் பல கோணங்களில் பல அதிசய தோற்றங்களுடன், பல கோவில்களில் காணப்படுகிறார். 

* மயிலாடுதுறை வள்ளலார் கோவில், சேந்தமங்கலம் ஆபத்சகாயேசுவரர் கோவில், திருவாய்மூர் வாய்மை நாதர் கோவில் ஆகியவற்றில் தட்சிணாமூர்த்தி பகவான் காளையுடன் தோற்றம் அளிக்கிறார். 

* திருநாவலூரில் தட்சிணாமூர்த்தி பகவான் காளையுடன் நின்ற கோலத்தில் விளங்குகிறார். ஆனால் இவரது காலடியில் வழக்கமாக காணப்படுகிற முயலகன் இல்லை. 

* திருப்பூந்துருத்தியில் தட்சிணாமூர்த்தி பகவான் வீணை வாசிக்கும் திருக்கோலத்தில் வீணா தட்சிணாமூர்த்தியாக உள்ளார். இது போன்ற அமைப்பு, நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்திலும், நாகலாபுரம் வேத நாராயணர் ஆலயத்திலும் மட்டுமே உள்ளது. 

* காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவிலில் வீணா தட்சிணாமூர்த்தி அமைப்பு உள்ளது. ஆனால் கையில் வீணை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

* பொதுவாக தட்சிணாமூர்த்தி இரண்டடி உயரம் தான் அமைக்க பெற்றிருப்பார். ஆனால் திருவொற்றிïர் ஆதிபுரீசுவரர் கோவிலின் வெளியே இருக்கிற மண்டபத்தில் ஆறு அடி உயரத்தில், வலக்கை அபய முத்திரை கொண்டவராக தோற்றமளிக்கிறார். இது போல் கண்டியூர், மதுரை இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிலைகளும் பெரியவைகளாகவே உள்ளன. 

* சென்னைக்கருகில் உள்ள திரிசூலம் கோவிலில் வலக்கால் மீது மற்றொரு காலை மடித்துப் போடாமல் குத்திட்டு வீராசன நிலையில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் இருக்கிறார். 

* திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கழுகு மலையில் உள்ள ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி பகவான் ஒரு கையை தரையில் ஊன்றி, விச்ராந்தி என்னும் போதிக்கும் நிலையில் உள்ளார். இங்குள்ள வெட்டுவான் கோவிலில் தட்சிணாமூர்த்தி பகவான் மிருதங்கத்துடன் காட்சி தருகிறார். 

* ஆந்திர மாநிலத்தில் உள்ள, அனந்தப்பூர்மா வட்டத்தில், ஹேமாவதி என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் தட்சிணாமூர்த்தி பகவான் ஐயப்பன் போல அமர்ந்த நிலையில் யோக மூர்த்தியாக காட்சி அளிக்கிறார். 

* தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக்கோட்டையை அடுத்த சுருட்டப்பள்ளி வான்மீகேசுவரர் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி பகவான் காளையுடன் மட்டுமல்லாமல், தன் ஒரு காலை மடித்து, தன் ஆசனத்தில் வைத்திருப்பதுடன், அக்காலையும், இடுப்பையும் சேர்த்த பட்டை ஒன்று காணப்படுகிறது. மேலும் இந்த தட்சிணாமூர்த்தி அம்பிகையை அனைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவர் சாம்ப தட்சிணாமூர்த்தி என அழைக்கப்படுகிறார். 

* திருநெய்த்தானம் திருக்கோவிலின் கருவறையில் தட்சிணாமூர்த்தி பகவான் நான்கு பக்கத்திலும் நின்ற கோலத்தில் இருக்கிறார். 

* திருவையாறு ஐயாறப்பன் திருக்கோவிலுள்ள தட்சிணாமூர்த்தி பகவான் கபாலமும், சூலமும் ஏந்தியவராக காணப்படுகிறார். இவர் காலின் கீழ் ஆமை வடிவம் உள்ளது. 

* வழக்கமாக தெற்கு நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி பகவான் பட்டமங்கலம் திருக்கோவிலில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். 

* பழனி பெரிய ஆவுடையார் கோவிலில், தட்சிணாமூர்த்தி பகவான் கைகளில் ஓலைச்சுவடி, பிரம்பு, தீப்பிழம்பு ஆகியவற்றுடன் அமைக்கப்பெற்றுள்ளார். 

* ஸ்ரீபெரும்புதூருக்கு வடக்கே 5 மைல் தூரத்தில் பாலாற்றின் கரையின் மீது அமைந்துள்ள தக்கோலம் ஜல நாதேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவான் இங்கு ஒரு காலை தொங்கவிட்டும், மற்றொரு காலை ஆசனத்தின் மீது ஏற்றி வைத்தும் தலைசாய்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். 

* வைணவக் கோவில் ஆகிய மன்னார் கோவில் உள்ள வேத நாராயணர் திருக்கோவிலில் விமானத்தின் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி பகவான் காட்சி அளிப்பது வியப்பான ஒன்றாகும். 

* ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தை சேர்ந்த எலுமியன் கோட்டூர், அருள்மிகு அரம்பேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவான் யோக தட்சிணாமூர்த்தியாக இன் முத்திரையை இதயத்தில் வைத்துள்ள அமைப்பாக அற்புதத் திருவுருவமாக காட்சி அளிக்கின்றார். 

* அரக்கோணம் வட்டம், திருமால்பூர் அருகே உள்ள, கோவிந்தவாடி என்னும் ஊரின் ஆலயத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி பகவான் மிக்க அழகுடனும், சிறப்புடனும் காட்சி தருகிறார். கட்டாயம் தரிசிக்க வேண்டிய அற்புத தட்சிணாமூர்த்தி இவர்.

No comments:

Post a Comment