Tuesday, September 23, 2014

இன்று பிதுர்களின் ஆசி கிடைக்கும் மகாளய அமாவாசை!
செப்டம்பர் 23,2014




ஒவ்வொரு மனிதனும், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். ஒரு பிள்ளையை வளர்க்க பெற்றோர்  செய்த  தியாகத்திற்கு அளவே கிடையாது. அவர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வது  எவ்வளவு அவசிய÷ மா, அதுபோல அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகும் இந்த நன்றிக்கடனைத் தொடரவேண்டும் என்கிறது சாஸ்திரம்.  அதற்காக பிதுர்கடனை ஏற்படுத்தி  வைத்தனர். தர்ப்பணம், பிதுர்காரியம், முன்னோர்கடன் என்று பல பெயர்களில் இதைக் குறிப்பிடுவர்.  நன்றியுணர்வோடு, அவர்கள் மறைந்த  மாதத்தின் திதியன்று சிரத்தையுடன் (மறக்காமல் கவனமுடன் ) செய்தல் அவசியம் என்பதால்  இதனை சிரார்த்தம் என்றும் சொல்வார்கள். தெய்வப் புலவர் திருவள்ளுவர், தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல், தான் என்றாங்கு  ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்று திருக்குறளில் குறிப்பிடுகிறார்.  இதில் சொல்லப்படும் ‘தென்புலத்தார் என்பது மறைந்த  முன்னோரையே குறிக்கும்.

முன்னோர்களின் உலகம் தெற்கு திசையில் இருப்பதால், அவர்கள் வாழும் உலகத்தை தென்புலம் என்று குறிப்பிடுவர். தர்ப்பணம்  செய்வதற்கென  பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் செய்வது அவசியம். சிலர் தை, ஆடி  அமாவாசைகளில்  மட்டும் கொடுக்கிறார்கள். ஒருவேளை, இதுவரை பிதுர் தர்ப்பணமே செய்யாமல் இருந்தால், மகாளாய அமாவாசையன்று  அதைத் தொடங்கினால்  மிகவும் சிறப்பு. இந்த தருணத்தில் தான் நமது முன்னோர் ஒட்டு மொத்தமாக பூமிக்கு வருவதாக ஐதீகம்.  தர்ப்பணத்தின் போது எள், ஜலம், பிண்டம்,  அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவர். இவற்றை பிதுர் தேவதைகள்  முன்னோர்களுக்குக் கொண்டு சேர்த்துவிடுவர்  என்கிறது சாஸ்திரம். பூலோகத்திற்கு தங்கள் பிள்ளைகளை பார்க்க வந்த முன்னோர்  மீண்டும் பிதுர்லோகத்திற்கு இன்று திரும்புவதாக ஐதீகம். இந் நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை  வழியனுப்பி வைப்பதும், குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழவும்,  வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும். 

No comments:

Post a Comment